Happy Teeth: வலி, கூச்சம்… அறிகுறிகளை வைத்தே பல் பிரச்னையின் தீவிரத்தை அறியலாம்!
பல் முளைப்பது, பற்களில் பிரச்னை, தொற்று என வாழ்நாளில் ஒருமுறையாவது பல் வலி ஏற்படாதவர்கள் இருக்க முடியாது.
பல் வலிக்கான காரணங்கள், தீர்வு பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா:
சொத்தை, ஈறு பிரச்னை, புதிய பல் வளர்வது, பற்களின் அமைப்பு சீராக இல்லாதது, மெல்லும்போது ஏதாவது குத்திவிட்டால் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பல் வலி ஏற்படலாம். பல் சொத்தை மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், தீவிர நோய்த்தொற்று ஆகிய இரண்டு காரணங்களால் அதிகமான, தாங்க முடியாத பல் வலி ஏற்படலாம்.
மூன்று அடுக்குகள்
பல்லின் மேல் பகுதியில் அதாவது ஈறுகளின் வெளிப்புறமாக இருக்கும் பற்களில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலில் இருப்பது எனாமல் (Enamel), இரண்டாவது அடுக்கின் பெயர் டென்டின் (Dentin), மூன்றாவது அடுக்கின் பெயர் பல்ப் (Pulp).
பிரஷ் செய்யும்போது பற்களில் சிறிய கறுப்பு நிறப்புள்ளி அல்லது மெலிதான கறுப்பு கோடு போன்று தெரிந்தால், முதல் அடுக்கில் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். அது பல் சொத்தையின் ஆரம்பம். இதற்கு பல் மருத்துவரை அணுகினால் சொத்தையை நீக்குவார்கள். சொத்தை ஏற்பட்ட இடத்தில் உணவு சிக்குகிறது என்றால் ஃபில்லிங் (Filling) முறையில் பல்லை அடைப்பார்கள்.
இரண்டாம் அடுக்கான டென்டினில் பாதிப்பு ஏற்படும்போது பல் கூச்சம், பல்லில் விறுவிறுப்பான உணர்வு தோன்றும். இந்த உணர்வு அவ்வப்போது ஏற்பட்டு, மறைந்துவிடும் என்பதால் பெரும்பாலானவர்கள் மருத்துவரை அணுகுவதில்லை. பல்கூச்சம் அறிகுறி தென்பட்ட உடன் மருத்துவரை அணுகினால், ஃபில்லிங் செய்யலாம், பாதிப்பு தீவிரமாக இருந்தால் ரூட் கனால் சிகிச்சை தேவைப்படலாம்.