`எங்களுடன் இருக்கிறாள்’ – அரிய வகை நோயால் இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றிய பெற்றோர்..!
பிடித்தவர்கள் இறக்கும்போது அவர்கள் பயன்படுத்திய பொருள்களைத் தூக்கி எறியவோ, அவர்களது எண்ணை மொபைலில் இருந்து நீக்கவோ மனம் வராது.
நெருக்கமானவர்களின் நினைவுகளை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களோடு சேர்த்து நம்மோடு வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில், அமெரிக்காவின் இடாஹோ நகரத்தைச் சேர்ந்த கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸி என்ற தம்பதி, TBCD (Tubulin folding cofactor D)என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கள் 15 மாத குழந்தையின் சாம்பலை அழகான கற்களாக மாற்றி தங்களோடு வைத்துள்ளனர்.
இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். மூன்றாவது குழந்தையான பாப்பிக்கு, நான்கு மாதங்கள் ஆனபோது, பார்வை சரியாகத் தெரியவில்லை என்பதைப் பெற்றோர் அறிந்துள்ளனர்.
மருத்துவர்கள் மேற்கொண்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில், மூளையின் மையப் பகுதியான கார்பஸ் கலோசம் குழந்தைக்குச் சரியாக வளர்ச்சியடையவில்லை என்பது தெரிய வந்தது.
தொடர்ச்சியான சோதனைகளிலும், குழந்தைக்கு ஏற்பட்ட நோய் பற்றி உறுதியாக அறியமுடியவில்லை. மரபணு பரிசோதனையில், அரிய வகை TBCD நோயால் குழந்தை பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர்.
உலகில், இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 38-வது குழந்தை பாப்பி என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது. இந்த நோயின் பாதிப்பு பற்றி கண்டுபிடிக்கவே பல மாதங்களாயின.
குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர் பெற்றோர். மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்தனர். அங்கிருந்து குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் குழந்தையை மாற்றியபோது குழந்தையின் இதயத் துடிப்பு நின்று போனது.
இது குறித்து கெய்லி கூறுகையில், “நாங்கள் பாப்பியின் சாம்பலை எங்களுடன் வீட்டில் வைத்திருக்க விரும்பினோம். சாம்பலை கலசத்தில் கொண்டு வந்து வைக்கலாம். ஆனால், வீட்டில் இரண்டு சிறு குழந்தைகள் இருப்பதால், அவர்கள் பயப்படுவார்கள், அதை உடைக்க நேரிடலாம். அதை நாங்கள் விரும்பவில்லை.
அப்போதுதான், இறந்துபோன அன்புக்குரியவர்களின் சாம்பலைக் கற்களாக மாற்றும் `பார்ட்டிங் ஸ்டோன்ஸ்’ (Parting Stones) என்ற அமைப்பு குறித்து அறிந்தோம். அவர்களைத் தொடர்பு கொண்டோம்.