Ayodhya Ram Mandir: அம்பானி முதல் அமிதாப் வரை; கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் முக்கிய பிரபலங்கள்!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி விழாவில் பங்கேற்க முக்கிய பிரதிநிதிகள், முதலாளிகள் மற்றும் நடிகர்களுக்கு ராமர் கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதல் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற அரசுகளின் பிரதிநிதிகளுக்கும் ராமர் கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பிரமுகர்களில் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் சில்-சுவும் ஒருவர். அவர் ராணி ஹியோவின் வம்சத்தைச் சேர்ந்தவராவார். சூரிரத்னா என்று அழைக்கப்படும் ராணி ஹியோ, அயோத்தியின் இளவரசி ஆவார். அவர் கொரியாவுக்குச் சென்று காரக் வம்சத்தைத் தொடங்கினார் எனக் கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய விருந்தினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், அல்லு அர்ஜுன், மோகன்லால், அனுபம் கெர் மற்றும் சிரஞ்சீவி ஆகிய முன்னணி நடிகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, பாடலாசிரியரும் கவிஞருமான மனோஜ் முன்டாஷிர் மற்றும் அவரது மனைவி, பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளரான பிரசூன் ஜோஷி, இயக்குநர்கள் சஞ்சய் பன்சாலி மற்றும் சந்திரபிரகாஷ் திவேதி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது மனைவி நிர்ஜா, பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமல், ஆனந்த் மஹிந்திரா மற்றும் டி.சி.எம் ஸ்ரீராமின் அஜய் ஸ்ரீராம் ஆகியோரும் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னாள் தூதரக அதிகாரி அமர் சின்ஹா, முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள் கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோத்தகி, இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முக்கியப் பிரதிநிதிகளின் வருகையை ஒட்டி, அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.