“மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படவில்லை; தொடை நடுங்கியாக இருக்கிறீர்கள்” – கே.எஸ்.அழகிரி
விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருக்கிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி தேர்வு உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்வதற்காக தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னைக்கு வந்திருக்கும் அவர் கடந்த இரண்டு நாள்களாக சத்தியமூர்த்தி பவனில் வார் ரூம் பொறுப்பாளர்கள், கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டம்
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், ” `20-ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில்,கடந்த முறை தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் வெற்றி பெற்றோம். தேனியில் மட்டும் தோல்வி ஏற்பட்டது. இந்தமுறை ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையால் மக்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என மக்கள் பலர் நினைக்கிறார்கள். எனவே இந்த முறை கூட்டணியில் 15 தொகுதிகள் கேட்க வேண்டும். குறைந்தபட்சம் 12வது கேட்டு பெற வேண்டும்.
குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அங்கு வெற்றி பெறுவதற்கான அனைத்து அமச்சங்களும் இருக்கிறது. தேர்தல் போட்டியிடுவதற்கு 50 சதவீதம் புதியவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்’ என நிர்வாகிகள் பேசினர். அதற்கு பதிலளித்த அஜோய்குமார், ‘உங்களது விருப்பங்களை டெல்லி சென்றதும் மேலிடத்துக்கு தெரிவிக்கிறேன்’ என உறுதி அளித்தார். மேலும் காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தி.மு.கவின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் விரைவில் பேச தயாராகி வருகிறார்கள்” என்றனர்.
ஆலோசனை கூட்டம் முன்னதாக ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நீதி பயணத்தை சென்னையில் உள்ள மக்கள் நேரடியாக காணும் வகையில் எல்.இ.டி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் இயக்கத்தை கே.எஸ். அழகிரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அழகிரி, “அயோத்தியில் ராமர் கோவில் இடத்திலா கோவில் கட்டுகிறார்கள்.. நிச்சயமாக இல்லை. பாபர் மசூதியில் இருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் ராமர் கோவில் கட்டுகிறார்கள். ஏறக்குறைய அயோத்தியில் 3200 ராமர் கோவில் உள்ளன. நீங்கள் கட்டுவது 3201. பழைய ராமர் கோவில் இருந்த இடத்தில் தற்போது கட்டவில்லை. அந்த மசூதியை எடுத்தீர்களே ஒழிய அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவில்லை. அதனை இடிப்பதற்கு ராமரை பயன்படுத்தினீர்கள்.