7 வயதில் ஆப்பரேஷன் செய்த இளம் மேதை அக்ரித் பிரான் ஜெய்ஸ்வால்..!
ஏழு வயதில் ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரிந்தாலே பெரிய விஷயம் ஆகும். அதிலும் அறிவியல், கணிதம் என வேறுபாடு பார்த்து அறிந்து கொள்வது அதைவிட பெரிய விஷயம் ஆகும்.
ஆனால் உலகில் சில விதிவிலக்கான திறமையான குழந்தைகளும் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் அக்ரித் பிரன் ஜெய்ஸ்வால், இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், 7 வயதில் அறுவை சிகிச்சை செய்தான். இதனால் உலகின் இளைய அறுவை சிகிச்சை நிபுணர் என்று முத்திரை குத்தப்பட்டார். 1993ல் பிறந்த இவருக்கு தற்போது 31 வயதாகிறது. பிறந்து 10 மாத்தில், அக்ரித் நடப்பது, பேசுவது போன்றவற்றை சர்வ சாதராணமாக செய்துள்ளான்.
இரண்டு வயது இருந்தபோது எழுதப் படிக்கத் தொடங்கினான். 5 வயதிலேயே ஆங்கில கிளாசிக்ஸைப் படித்து, ஏழு வயதில் தனது அற்புதமான சாதனையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். 5 வயதில் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட அக்ரித் அடுத்த ஆண்டிலேயே சக மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார். இமாச்சலப் பிரதேச மாநிலம் நூர்பூரைச் சேர்ந்த அக்ரித் பிரான் ஜெய்ஸ்வால், தீக்காயம் அடைந்த 8 வயது சிறுமியின் கைகளில் அறுவை சிகிச்சை செய்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
12 வயதில், அந்த அதிசயக் குழந்தை தேசத்தின் “இளைய பல்கலைக்கழக மாணவர்” ஆனபோது மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். 13 வயதில், அவர் தனது வயதில் மிக உயர்ந்த IQ (146)வைக் கொண்டிருந்தார். அக்ரித் ஜெய்ஸ்வாலின் குழந்தைப் பருவத்தில் செய்யப்பட்ட அசாதாரண செயல்கள் அவருக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்தது. அவர் புகழ்பெற்ற ஓப்ரா வின்ஃபிரே தொகுத்து வழங்கிய உலகப் புகழ்பெற்ற பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அக்ரித் புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்தியாவில் ஏராளமான புற்றுநோயாளிகளின் அவல நிலையைக் கவனித்த பிறகு அவர் உருவாக்கிய மன உறுதி இது. ஓப்ரா வின்ஃபிரே நிகழ்ச்சியில், மரபணு சிகிச்சை தனது புற்றுநோய் ஆராய்ச்சிக்கு சரியான அடிப்படையை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார்.