ஹர்திக் பாண்டியா ரெடி…! ஆனால் ரோகித்துக்கும் வாய்ப்பு இருக்கு – பிசிசிஐ பிளான் இதுதான்
ரோகித் சர்மா டெஸ்ட் தொடர் கேப்டன் பொறுப்பில் மட்டும் நீடிக்கிறார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பொறுப்பு ஏறத்தாழ அவரிடம் இருந்து சென்றுவிட்டதாக கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக நீக்கப்படவில்லை என்றாலும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறுவதே இல்லை. இதில் இருந்தே ரோகித் சர்மா ஓரங்கட்டப்படுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது. இருப்பினும் அவருக்கு இருக்கும் மும்பை லாபி 2024 உலக கோப்பை தொடர் வரை விளையாட வைக்க முயற்சி எடுத்தாலும் அதற்கு எதிராக வந்து நிற்கிறார் ஹர்திக் பாண்டியா.
அவரும் மும்பை என்பதால் ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவே கேப்டன் பொறுப்பில் இருக்கலாம் என ஒரு தரப்பு நினைக்கிறது. அதன் ஒருபகுதி தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டிருப்பதும். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருந்தாலும் எதிர்வரும் ஒரே ஒரு ஐபிஎல் தொடருக்கு மட்டும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை அதிரடியாக அந்த அணி நிர்வாகம் எடுத்திருக்கிறது. இதனை ரோகித் சர்மாவே எதிர்பார்க்கவில்லை.
இந்த சூழலில் ரோகித் சர்மா அமைதி காத்து வருகிறார். எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. ஹர்திக் பாண்டியா இப்போது காயத்தில் இருந்து மீள சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக முழு உடல்தகுதியை எட்டுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு சில தகவல்கள் அவர் ஐபிஎல் தொடரில் கூட விளையாட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை மறுக்கும் வகையில் இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரிலேயே இந்திய அணிக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் உடல் தகுதியை எட்டவில்லை என்றால் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு இருப்பதாகவும், ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கும் எண்ணம் பிசிசிஐக்கு இல்லை என்றும் தெரிவிக்கிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.