விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்த CTS ரவி குமார்..!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்நிறுவனத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணியாற்றிய ஜதின் தலால் தனது தலைமை நிதி அதிகாரி பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிர்வாகத்திற்கு மட்டும் அல்லாமல் சக ஐடி ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சி கொடுத்துவிட்டு CTS எனச் செல்லமாக அழைக்கப்படும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்-ல் புதிய தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தார்.
இவர் மட்டும் அல்லாமல் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் உட்படப் பல முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் இருந்து முக்கிய அதிகாரிகளை 2023ல் அடுத்தடுத்துக் காக்னிசென்ட் பெரும் சம்பளத்தில் பணியில் அமர்த்தியது.
இதில் கடுப்பான விப்ரோ வெளியேறிய அதிகாரிகள் மீது அடுத்தடுத்து வழக்குத் தொடுத்து மற்ற உயர் அதிகாரிகளுக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாக விப்ரோ நிறுவனம், ஜதின் தலால் மீது ‘ஒப்பந்தத்தை மீறியதாக’ 25.15 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடுத்தது. இதேபோல் அமெரிக்க அதிகாரி ஒப்பந்தம் மீறி காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்த காரணத்தால் வழக்குத் தொடுத்தது. மேலும் இன்போசிஸ் நிர்வாகம், காக்னிசென்ட் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் சிடிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரவி குமார் டாவோஸ் நகரில் நடந்து வரும் WEF கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பேட்டியில், போட்டி நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகளை ஈர்த்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குக் கூலாகப் பதில் அளித்தார் காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார், நான் என்னுடைய வேலையைத் தான் செய்கிறேன், என்னைப் பொருத்த வரையில் ஊழியர்களின் தேர்வாகக் காக்னிசென்ட் மாற வேண்டும் என்பது மட்டுமே இலக்கு எனத் தெரிவித்தார்.
காக்னிசென்ட் தொடர்ந்து மேம்பட்ட முறையில் கட்டமைக்கப்படும் எனக் கூறிய காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார், அப்படியானால் மேலும் போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஈர்க்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.