ஒரே ஆண்டில் ரூ.10,000 முதலீட்டை 2 லட்சமாக மாற்றிய மல்டிபேக்கர் பங்கு – Jai Balaji Industries
பிக்சட் டெபாசிட், நிலம் போன்றவற்றை காட்டிலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் பார்க்கலாம் என்று பலரும் சொல்ல கேட்டு இருப்போம்.
ஆனால் இது உண்மையா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். சரியான பங்குகளில் முதலீடு செய்தால் அது சாத்தியமான ஒன்றுதான்.உதாரணமாக ஒரு ஸ்மால் கேப் பங்கு ஒராண்டில் முதலீட்டாளர்களுக்கு 1,845 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது.
அந்த மல்டிபேக்கர் பங்கு ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ். ஒராண்டுக்கு முன்பு இந்நிறுவன பங்கில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் அது தற்போது ரூ.1,94,000 ஆக உயர்ந்திருக்கும். ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. 1999ல் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பாலாஜி சக்தி பிராண்டின் கீழ் தனது டிஎம்டி பார்களை (தெர்மோ மெக்கானிக்கல் ட்ரீட்டட் பார்கள்) விற்பனை செய்கிறது.இந்நிறுவனம் தனது இரும்பு மற்றும் ஸ்டீல் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப நிலவரம் வலுவாக உள்ளது.
2023 செப்டம்பர் காலாண்டில் ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபம் 862 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.202 கோடியாக அதிகரித்துள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.22 கோடியாக இருந்தது.2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.170 கோடி ஈட்டியிருந்தது. 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 13 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,547 கோடியாக அதிகரித்துள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,369 கோடி ஈட்டியிருந்தது.ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு மல்டிபேக்கர் பங்காக விளங்குகிறது. கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூன் ஆகிய 4 மாதங்களில் மட்டும் இப்பங்கின் விலை சரிந்தது. அதேசமயம் இதர எட்டு மாதங்களில் இப்பங்கு விலை ஏற்றம் கண்டது.
இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நினைத்து பார்க்காத லாபத்தை குறுகிய காலத்தில் வழங்கியுள்ளது. 2023 ஜனவரியில் ரூ.53.8ஆக இருந்த இப்பங்கின் விலை 2024 ஜனவரியில் ரூ.1,046.90ஆக உயர்ந்துள்ளது.இந்த காலத்தில் இப்பங்கு 1,845 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது.