`வனவாசத்தின்போது ஶ்ரீராமர் தங்கிச் சென்ற நரிமணம் திருத்தலம்!’ ஜனவரி – 22 அன்று சிறப்பு பூஜைகள்!
காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் சிறிய கிராமம் நரிமணம், புராதானமான இந்தத் தலத்தில் பழைமையும் பெருமையும் வாய்ந்த இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்று ஶ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில். மற்றொன்று ஶ்ரீநிவாஸ பெருமாள் கோயில். இந்த ஊர் குறித்த பல்வேறு செய்திகள் அகஸ்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்கிறார்கள்.
ராமர்-சீதை- லக்ஷ்மணர் -அனுமன்
ஊரின் நடுவே அமைந்திருக்கும் ஶ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சுவாமி ஶ்ரீதேவி-பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தற்போது இங்கு இருக்கும் கோயிலின் கட்டுமானம் சுமார் 300 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். ஆலயத்தின் வாசலிலேயே அமைந்திருக்கும் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் திருக்காட்சி இத்தலம் ஹரிவனமே என்பதைப் பறைசாற்றுகிறது.
கருவறையில் பெருமாள் சங்கு சக்ர கதா தாரியாக, அபய ஹஸ்தத்தோடும், திருப்பதி பெருமாள் போல ஒரு கையை இடையில் வைத்துக் கொண்டும், ஶ்ரீதேவி-பூதேவி தாயாரோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு வந்து வேண்டிக்கொண்டால் வாழ்வில் சகல துன்பங்களும் நீங்கும். செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்புகளை உடைய திருத்தலத்தில் ஜனவரி 22 -ம் தேதி நடைபெற இருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கின்றன. இதுகுறித்துக் கோயிலைச் சேர்ந்த கணேச குருக்களிடம் கேட்டோம்.