IND vs ENG : சுப்மன் கில்லுக்காக நடந்த தவறு.. பேட்டிங் ஆவரேஜ் 51 கொண்ட வீரரை கழட்டி விட்ட ரோஹித்
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள புஜாராவை வேண்டாம் என கேப்டன் ரோஹித் சர்மா தவிர்த்து இருக்கிறார்.
சுப்மன் கில்லை அணியில் தக்க வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
புஜாரா கடந்த சில சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியதால் நீக்கியதாகவும், மேலும் இளம் வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வமற்ற தகவல் கூறப்படுகிறது. ஆனால், சுப்மன் கில் பேட்டிங், புஜாராவை விட படுமோசமாக இருக்கிறது என்பது தான் உண்மை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் புஜாரா இருக்கிறார்.
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள புஜாரா 972 ரன்கள் குவித்துள்ளார். இதன் பேட்டிங் சராசரி 51.15 ஆகும். அதிகபட்சமாக 206 ரன்கள் குவித்துள்ளார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சுனில் கவாஸ்கர் 1331 ரன்களுடனும், இரண்டாவது இடத்தில் குண்டப்பா விஸ்வநாத் 1022 ரன்களுடனும், மூன்றாவது இடத்தில் விராட் கோலி 1015 ரன்களுடனும் இருக்கின்றனர். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் விராட் கோலி மற்றும் புஜாரா மட்டுமே இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் அதிக அளவில் ரன் குவித்து இருக்கின்றனர்.