ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. குறி வைத்து காத்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்.. பாவம் இங்கிலாந்து!
ஐதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இரு பெரும் சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஃப் ஸ்பின் என்ற கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்றே சொல்லலாம். டி20 கிரிக்கெட்டின் எழுச்சியால் ரிஸ்க் அதிகமுள்ள ஆஃப் ஸ்பின் வீசுவதற்கு இளைஞர்கள் ஈடுபாடு காட்டாமல், லெக் ஸ்பினையே கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஃப் ஸ்பின்னர் என்று பார்த்தோமானால் ரவிச்சந்திரன் அஸ்வின், நேதன் லயன், மொயின் அலி உள்ளிட்டோர் மட்டுமே உள்ளனர்.
டி20 கிரிக்கெட்டுல் வெல்ல வேண்டுமென்றால் லெக் ஸ்பின்னர் முக்கியமாக இருக்கலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெறுவதற்கு கண்டிப்பாக ஒவ்வொரு அணியிலும் ஒரு தரமான ஆஃப் ஸ்பின்னர்கள் இருக்க வேண்டும். அதன் காரணமாகவே ஆஷஸ் தொடரின் போது ஜாக் லீச் காயம் காரணமாக விலகிய போது, உடனடியாக பென் ஸ்டோக்ஸ் மொயின் அலியை ஓய்வில் இருந்து மீண்டும் அழைத்து வந்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100 டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார். இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 490 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.