காரை விட்டு இறங்காமல் காத்திருந்த சசிகலா.. உள்ளே ஓபிஎஸ்.. நேருக்கு நேர் மீட்டிங் தவிர்ப்பு?
சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் கார் கிளம்பும் வரை காரை விட்டு இறங்காமல் காத்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
எம்ஜிஆர் நினைவு நாள்
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக என்ற பெயரையும், கட்சி கொடி, சின்னத்தையும் ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு” என்ற பெயரில் ஓபிஎஸ் அணியினர் பேனர் வைத்திருந்தனர்.
ஓபிஎஸ், சசிகலா வருகை: ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர் நினைவிடத்தில் இருக்கும்போதே, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அப்பகுதிக்கு வந்தார். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன், எம்ஜிஆர் நினைவிடத்தில் இருக்கும் தகவல் அறிந்ததும், பிரதான சாலையிலேயே காரில் காத்திருந்தார் சசிகலா. ஓபிஎஸ், அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை காரை விட்டு இறங்கவில்லை.
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தி விட்டு, உறுதிமொழி ஏற்றார். பின்னர் ஓபிஎஸ் அங்கிருந்து புறப்படும்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மரியாதை செலுத்துவதற்காக எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வந்தார். இதனை கவனித்த ஓ.பன்னீர்செல்வம் தனது காரில் இருந்து இறங்கிச் சென்று திருநாவுக்கரசரிடம் நலம் விசாரித்தார். இருவரும் ஓரிரு நிமிடங்கள் பேசினர்.
காத்திருந்த சசிகலா
பின்னர், ஓபிஎஸ் தனது காரில் கிளம்பிய பிறகு தான், சசிகலா காரில் இருந்து இறங்கி, எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்றார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சூழல் இருந்த நிலையில், சசிகலா இன்று அதனை தவிர்த்துள்ளார். இந்நிகழ்வு, அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என தடையும் பெற்றது ஈபிஎஸ் தரப்பு. இதற்கிடையே, வாய்ப்பு அமைந்தால் சசிகலாவை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார். இந்நிலையில், இன்று நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பை வேண்டுமென்றே சசிகலா தவிர்த்திருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.