200 பில்லியன் டொலர் சொத்துமதிப்பு கொண்ட உலகின் கோடீஸ்வர அரசியல்வாதி: ரூ 5800 கோடியில் தனி விமானம்
உத்தியோகப்பூர்வமாக ஆண்டுக்கு 140,000 டொலர் சம்பளம் வாங்குவதாக அறிவித்திருந்தாலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மொத்த சொத்துமதிப்பும் அவரது சொகுசு வாழ்க்கையும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.
தனிப்பட்ட சொத்துமதிப்பு
1990களில் இருந்தே ரஷ்யாவில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள விளாடிமிர் புடினின் தற்போதைய தனிப்பட்ட சொத்துமதிப்பு என்பது 200 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
ஆனால் தமக்கு சொந்தம் என வெளிப்படையாக புடின் உரிமை கொண்டாடுவது 800 சதுர அடி கொண்ட ஒரு மாளிகையை மட்டுந்தான். Black Sea mansion எனப்படும் அந்த மாளிகையானது மலை முகட்டில் அமைந்துள்ளது. இதன் மதிப்பு 1.3 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
கிரேக்க கடவுள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பளிங்கு நீச்சல் குளம், ஒரு ஆம்பிதியேட்டர், ஒரு அதிநவீன ஐஸ் ஹாக்கி ரிங்க், வேகாஸ் பாணி கேசினோ ஒன்று மற்றும் இரவு விடுதியும் கூட அந்த மாளிகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டு சம்பளத்தை விட பல மடங்கு
அந்த மாளிகையின் உள் அலங்காரத்திற்கு மட்டும் 500,000 டொலர் செலவிடப்பட்டுள்ளது. மது அருந்தும் மேஜைக்கு 54,000 டொலர் செலவிடப்பட்டுள்ளது. 40 ஊழியர்களுடன் இந்த மாளிகையை பராமரிக்க மட்டும் ஆண்டுக்கு 2 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறதாம்.
இந்த மாளிகை மட்டுமின்றி, புடினுக்கு வேறு 19 குடியிருப்புகள் சொந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர 700 கார்கள், 58 குட்டி விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர், அத்துடன் ரூ 5800 கோடி மதிப்பிலான தனி விமானம் ஒன்றும் புடினுக்கு சொந்தமாக உள்ளது.