Captain Miller Box Office: ரூ. 100 கோடியை நெருங்கும் வசூல்! வரும் வாரம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு – ஏன் தெரியுமா?
தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.
அருண் மாதேஷ்வரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் ஷவ் ராஜ்குமார், சந்தீப் கிஷான், பிரியங்கா மோகன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படம் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
பேன் இந்தியா படமாக உருவாகியிருந்தாலும், கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாகவில்லை. சங்கராந்தியை முன்னிட்டு ஹனுமன், குண்டூர் காரம், சைந்தவ், நா சாமி ராக என தெலுங்கில் நான்கு படங்கள் வெளியான காரணத்தால் பிற மொழி படங்களை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு நிலவிய நிலையில் கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழ் உள்பட ரிலீசான பிற மொழிகளில் கேப்டன் மில்லர் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பொங்கலுக்கு ரிலீஸான படங்களில் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ரூ. 100 கோடியை நெருங்கியுள்ளது.
படம் வெளியாகி 8 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 90.39 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. விரைவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் நிலையில் முதல் நாள் ரூ. 16.29 கோடி, இரண்டாவது நாள் ரூ. 14.18 கோடி, மூன்றாவது நாள் ரூ. 15.65 கோடி, நான்காவது நாள் ரூ. 13.51 கோடி, ஐந்தாவது நாள் ரூ. 12.24 கோடி, ஆறாவது நாள் ரூ. 9.33 கோடி, ஏழாவது நாள் ரூ. 4.92 கோடி, எட்டாவது நாள் ரூ. 4.27 கோடி என வசூலித்துள்ளது.