‘ராமர் கோயில் திறப்பு விழா முடிந்ததும் ராகுல் காந்தி தரிசனத்துக்கு வரலாம்’- அசாம் கோயில் நிர்வாகம்
குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை (திங்கள்கிழமை) ராமர் கோயில் திறப்பு விழா முடிந்ததும் சாமி தரிசனத்துக்கு வரலாம் என்று அசாமிலுள்ள படத்ரவா தான் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து படத்ரவா தான் கோயில் நிர்வாக கமிட்டி கூறுகையில், ‘அயோத்தி ராமர் கோயிலில் நாளை பிரான் பிரதிஷ்டா நடைபெறுகிறது. அதனால் இங்கு கோயிலுக்கு நிறைய பக்தர்கள் வருவார்கள்.அதுவும் தவிர கோயிலுக்கு வெளியே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் ராகுல் காந்தி பிற்பகல் 3 மணிக்கு மேல் தரிசனத்துக்கு வரலாம் என நிர்வாக கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
படத்ரவா தான் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜோகேந்திர நாராயண் தேவ் மஹந்தா, ‘ராகுல் காந்தி தானுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நாளைக்கு 10,000 பேருக்கு மேல் கோயிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். அந்த நேரத்தில் ராகுல் காந்தி கோயிலுக்கு வந்தால் அவருக்கு வரவேற்பு அளிப்பதில் சில சிரமங்கள் ஏற்படலாம்.
இன்று நடந்த படத்ரவா தான் நிர்வாகக் குழுவின் கர்நாதர் கமிட்டி கூட்டத்தில், அவர் நாளை 3 மணிக்கு மேல் வரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு எங்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடியும். இதுகுறித்து உள்ளூர் எம்எல்ஏ, ஆணையர், காவல்த்துறை கண்காணிப்பாளருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்குள்ள ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடமான படத்ரவ சத்ராவுக்கு திங்கள்கிழமை சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். துறவி, அறிஞர், சமூக – மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார்.