`முழுமையாக கட்டிமுடிக்கப்படாத கோயில்; அரசியல் விளையாட்டில் நாளை திறக்கிறார்கள்!’ – கனிமொழி எம்.பி
தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், அமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் இன்று தொடங்கியது.
தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, காலை 9 மணியளவில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடக்கிவைத்தார். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெறும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், `ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்’, `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’, `பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும்’ உட்பட 25 தீர்மானங்களை உதயநிதி முன்மொழிந்தார்.
திமுக இளைஞரணி மாநாடு
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாலையில் உரையாற்றிய கனிமொழி, “நாம் பெரியாரின் பிள்ளைகள். இங்கே கொள்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வட இந்தியாவில் நாளை கோயிலைத் திறக்கிறார்கள். அந்தக் கோயிலைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை, ஏன் குடியரசுத் தலைவர் அழைக்கவில்லை என்றுகூடக் கேட்கப் போவதில்லை.
ஒன்றை மட்டும் நான் கேட்கிறேன் ஒரு கோயிலை முழுதாக முடிக்காமல் திறக்கலாமா… இன்றைக்கு இருக்கின்ற பா.ஜ.க, நாங்கள்தான் இந்து மதத்தைக் காப்பாற்றுகிறோம், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம், கோயில்களைக் காப்பாற்றுகிறோம், அனைத்து கோயில்களையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள் என்கிறார்கள். கட்டி முடிக்காத கோயிலைத் திறக்கக் கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், அதை அரசியலாக்கி உங்களின் அரசியல் லாபத்துக்காக இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல், உங்களுடைய ஆள்களே கோயிலுக்கு வர மாட்டோம் என்று சொல்கின்ற அளவுக்கு, அரசியல் விளையாட்டில் கோயிலை நாளை திறக்கப் போகிறீர்கள்.