காங்கிரஸ் பேரழிவை சந்திப்பது இப்படித்தான்!அகிலேஷ் எதிர்ப்பு மத்தியில் மாயாவதிக்கு வம்படியாக அழைப்பு!
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த “இந்தியா” கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சி பகிரங்க அழைப்பு விடுத்திருப்பது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை கடுமையாக கொந்தளிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
“இந்தியா” கூட்டணியில் காங்கிரஸை உள்ளடக்கி மொத்தம் 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. “இந்தியா” கூட்டணியின் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றும் வருகிறார்.
டெல்லியில் நடைபெற்ற “இந்தியா” கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சியினர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை இந்தியா கூட்டணியில் இணைக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்தியா கூட்டணியில் இணைந்தால் அடுத்த நிமிடமே சமாஜ்வாதி கட்சி வெளியேறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் தொடங்கின. எடுத்த எடுப்பிலேயே 20 முதல் 25 இடங்களைக் கேட்டது காங்கிரஸ். ஆனால் சமாஜ்வாதி கட்சியோ 5 முதல் 6 இடங்கள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டது.
இதனையடுத்து அகிலேஷ் யாதவை சீண்டும் வகையில் இந்தியா கூட்டணியில் மாயாவதி கட்சி இணைய வேண்டும் என உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக கருதப்படும் மாயாவதியும், “இந்தியா” கூட்டணியில் இணைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக திடீரென மறைமுகமாக பேசி வருகிறார். இதனால் உத்தரப்பிரதேசத்தில் “இந்தியா” கூட்டணி உடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி ஆகியவை காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. நிதிஷ்குமாரை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கவில்லை என்பதுதான் அந்த கட்சிகளின் கோபமும் ஆதங்கமும். இந்த பின்னணியில் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷை வம்படியாக வெளியேற்றும் வகையில் மாயாவதிக்கு தூது விட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸின் போக்கு “இந்தியா” கூட்டணியின் இதர கட்சிகளையும் எரிச்சல் அடைய வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.