ரோஹித் சர்மா சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்யவே வந்திருக்கக்கூடாது.. ஆப்கன் வீரர் ஓபன் டாக்..

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா சூப்பர் ஓவரின் போது ரிட்டையர்ட் அவுட் ஆகிவிட்டு மீண்டும் பேட்டிங் செய்ய வந்தது குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனத் பேசி இருக்கிறார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் முதல் 20 ஓவர்களில் இரு அணிகளும் 212 ரன்கள் எடுத்ததை அடுத்து போட்டி டை ஆனது. பின்னர் நடந்த முதல் சூப்பர் ஓவரும் டை ஆனது. அந்த முதல் சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா கடைசி பந்துக்கு முன் தாமாக ரிட்டையர்ட் அவுட் முறையில் களத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால், முதல் சூப்பர் ஓவர் டை ஆனதால் இரண்டாவது சூப்பர் ஓவர் நடந்த போது அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். விதிப்படி அது தவறு. அம்பயரோ அல்லது ஆப்கானிஸ்தான் கேப்டனோ அதை தடுத்து இருக்க வேண்டும். ஆனால், இதற்கு முன் இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்ததில்லை என்பதால் யாருக்கும் இது குறித்து தெரியவில்லை.
இது பற்றி பேசிய கரீம் ஜனத், “எங்களுக்கு அது குறித்து அதிகம் தெரியாது. எங்கள் அணி நிர்வாகம் அதுபற்றி அம்பயரிடம் பேசினார்கள். அப்போது ரோஹித் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், பின்னர் தான் எங்களுக்கு அவர் பேட்டிங் செய்ய வந்திருக்கக் கூடாது என்பது தெரிய வந்தது. நீங்கள் ரிட்டையர்ட் அவுட் ஆனாலும் பேட்டிங் செய்ய வர முடியாது. இப்போது எங்களால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது. நடந்தது நடந்துவிட்டது. கேப்டனும் பயிற்சியாளரும் இது குறித்து விவாதித்தார்கள். ஆனால், அது அவர்களுக்குள் மட்டுமே நடந்தது” என்றார்.
முன்னதாக இது குறித்து ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர் கூறுகையில், “ரோஹித் சர்மா ரிட்டையர்ட் ஹர்ட்டா? அல்லது ரிட்டையர்ட் அவுட்டா? என எனக்கு எனக்கு தெரியாது. இதற்கு முன் எப்போதும் இரண்டு சூப்பர் ஓவர் நடந்ததில்லை. இங்கே புதிய விதிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ரிட்டையர்ட் அவுட் விதி குறித்து எங்களுக்கு யாரும் சரியாக சொல்லவில்லை. ஆனால், இந்த விதிகள் இனி எழுத்துப் பூர்வமாக அளிக்கப்படும் என நினைக்கிறேன். இதுதான் விதி என்றால் அதை தான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் நன்றாக ஆடினோம். இங்கே விதிகள் பேசுபொருளாக இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்” என்றார் ஜொனாதன் டிராட்.