இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள், கூட்டணிகளை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கட்சியினரை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் இறுதி வாக்காளர் பட்டியல் இறுதிப்படுத்தும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையொட்டி கடந்த சில மாதங்களாக, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றிற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று திருத்தங்கள் செய்து கொள்ள விண்ணப்பித்திருந்தனர். இதனிடையே தேர்தல் நெருங்குவதை அடுத்து, இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாமல், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.