ராமர் கோயில் திறப்பு விழா… தமிழக மக்கள் வீடுகளில் முன் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள் – ஆளுநர் ரவி வேண்டுகோள்
ஆயோத்தியில் ராமர் கோயல் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய விவிஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பல லட்சம் மக்களும் அயோத்தியை நோக்கி சென்றுள்ளனர். இதன் காரணமாக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் சிறப்பு வழிபாடும், பிரம்மாண்ட திரையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒளிபரப்பவும் செய்யவுள்ளனர்.
வீட்டில் தீபம் ஏற்றுங்கள்
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில், நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன். ‘ஸ்ரீ ராமர்’ பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்வதாக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.