அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு – உலக முழுவதும் களைகட்டும் கொண்டாட்டம்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டனிலும் பல்வேறு விதமான வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16 ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7 ஆவது நாளான இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவை ஒட்டி, டெல்லி கரோல்பாக்கில் உள்ள நகைக்கடையில் வெள்ளியால் கட்டப்பட்ட ராமர் கோயில் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன், அதில் உள்ள தங்கத்தால் ஆன பால ராமர் சிலை கவனம் ஈர்த்தது.
இதேபோன்று, உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ராமர் கோயில் வடிவமைப்புடன் கூடிய 18 காரட் தங்க மோதிரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி இந்தியாவே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல் கேட் பாலத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் மாபெரும் கார் பேரணி நடைபெற்றது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள பிரம்மரிஷி மிஷன் ஆசிரமத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை ஒட்டி இந்துக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவிலும் ஜம்மு காஷ்மீர், ஹரித்வார், கோவை, மும்பை, டெல்லி என பல்வேறு பகுதிகளில் ராம பக்தர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.