ராமர் கோயிலை வைத்து பாஜக போடும் பிளான்.. மோடி கூட சொல்லிட்டாராம்! 2024 லோக்சபா தேர்தல் போகஸ் இதுதான்
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் என்ன மாதிரியான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சட்டசபைத் தேர்தல்கள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இந்தியாவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் அடுத்து லோக்சபா தேர்தலுக்கு ரெடியாகி வருகிறது. லோக் சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரு தேசிய கட்சிகளும் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளன.
லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டே கடந்த சனிக்கிழமை பாஜக மற்றும் காங்கிரஸ் இரு முக்கிய கூட்டங்களை நடத்தி இருந்தது. இதில் டெல்லியில் பாஜக நடத்திய கூட்டம் ரொம்பவே முக்கியமானது இது குறித்து நாம் பார்க்கலாம்
ஆலோசனைக் கூட்டம்: சனிக்கிழமையன்று முடிவடைந்த இரண்டு நாள் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகுமாறு பிரதமர் மோடி பாஜக தொண்டர்களை அறிவுறுத்தி உள்ளார். மேலும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக 35 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தொடங்கிய பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, லோக்சபா தேர்தலுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொண்டார். 2019 லோக்சபா தேர்தலில் பாஜக 22.9 கோடி வாக்குகளை பெற்ற நிலையில், 2024 தேர்தலில் 35 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமர் கோயில்: இந்தக் கூட்டத்தில் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் அயோத்தி ராமர் கோயில் குறித்தும் அதிகம் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ராமர் கோயில் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரவும் அது குறித்த கூட்டங்களை நடத்தவும் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் கும்பாபிஷேக விழாவை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு இந்த ராமர் கோயிலுக்குப் பொதுமக்கள் சென்று வரவும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமர் கோயிலை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பாஜகவின் இந்துத்துவ வாக்கு வங்கியைத் தக்கவைக்க உதவும்.
அரசுத் திட்டங்கள்: மேலும், பல்வேறு அரசுத் திட்டங்களால் 7 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் பாஜக வாக்கு வங்கியை அதிகரிக்க உதவும் எனத் தெரிகிறது. அடுத்து ஜனவரி மாதம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கான கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும், இந்தத் தேர்தலில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளைக் குறிவைத்து பிரச்சாரம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.
பூத் மட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருடனும் தொடர்பில் இருக்குமாறும், அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களைச் சந்திக்குமாறும் பாஜக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் நிலையில், அது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.