சென்னை புத்தக கண்காட்சி.! 19 நாட்களில் எத்தனை கோடிக்கு புத்தகம் விற்பனை.? வருகை தந்த வாசகர்கள் எத்தனை பேர்.?
எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஏற்ப ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இளைப்பாறும் பூஞ்சோலை தான் இந்த புத்தக கண்காட்சி, புத்தகம் தான் சிறந்த நண்பர் என கூறுவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் பல இடங்களிலும் புத்தக கண்காட்சி நடைபெற்றாலும் சென்னையில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் புத்தக கண்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.
15லட்சம் வாசகர்கள், 18கோடிக்கு புத்தகம் விற்பனை
19 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் புத்தக கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்பட்டது. மேலும் புத்தக கண்காட்சியில் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. சிறியவர்களுக்கு கட்டணமின்றியும் அனுமதி அளிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள், கவிஞர்களின் உரையும் நிகழ்த்தப்பட்டது. இதனிடையே கடந்த 19 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி நேற்றோடு நிறைவடைந்தது. இந்த புத்தக கண்காட்சியில் 15 இலட்சம் வாசகர்கள் வருகை தந்தார்கள். சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.