பில்கிஸ் பானு வழக்கு.. ரத்தான விடுதலை.. 11 குற்றவாளிகளும் மீண்டும் சரண்..

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு ஏற்பட்ட கலவரத்தின் போது 21 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் உட்பட குடும்பத்தின் 14 உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களின் தண்டனை காலம் முடியும் முன்பே நன்னடத்தை அடிப்படையில் குஜராத் அரசு 2022-ம் ஆண்டு விடுதலை செய்தது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது.

குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது 11 குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு வழங்கிய விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து 11 குற்றவாளிகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர். குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்த உச்சநீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு கூறியிருந்த நிலையில் நேற்று பகாபாய் வோஹானியா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, கோவிந்த் நாய், ஜஸ்வந்த் நாய், மிதேஷ் பட், பிரதீப் மோர்தியா, ராதேஷ்யாம் ஷா, ராஜூபாய் சோனி, ரமேஷ் சந்தனா மற்றும் ஷைலேஷ் பட் ஆகிய 11 குற்றவாளிகளும் சரணடைந்தனர்.

முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சில நாட்களுக்குப் பிறகு, குற்றவாளிகள் உடல்நலக்குறைவு, வரவிருக்கும் அறுவை சிகிச்சை, மகனின் திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சரணடைய கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *