குடியரசு தினம் 2024: டிக்கெட் முன்பதிவு, இடம், அணிவகுப்பு செல்லும் பாதை – முழு தகவல் இதோ!
குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
அந்தவகையில், நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தினத்தை கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், டிக்கெட் முன்பதிவு, இடம், பேரணி செல்லும் பாதை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
மூவர்ண கொடியேற்றும் குடியரசுத் தலைவர்
குடியரசு தினம் என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று ஏற்றுக் கொண்டதை கொண்டாடும் நாள் ஆகும். அன்றைய தினம், டெல்லி ராஜபாதையில் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன் குடியரசு தலைவர் மூவர்ண கொடியை ஏற்றுவார். இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், விமானங்கள் ஆகியவையும் அணிவகுப்பில் கலந்து கொள்ளும். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பர்.
குடியரசு தினம் 2024: அணிவகுப்பு தேதி, இடம் மற்றும் நேரம்
டெல்லி ராஜபாதையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின நிகழ்வு, காலை 9:30 மணிக்கு விஜய் சவுக்கிலிருந்து தொடங்கி தேசிய மைதானத்திற்கு ஐந்து கிலோமீட்டர் பாதை நீள்கிறது.
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
** பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தின் aamantran.mod.gov.in/login என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்
** உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி-ஐ உறுதி செய்யவும்
** பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், கேப்ட்சா குறியீடை சரியாக உள்ளிட வேண்டும்
** நிகழ்வு பட்டியலில் குடியரசு தின அணிவகுப்பு என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, அடையாள அட்டையின் வகையை தேர்வு செய்து, அடையாள சான்றை பதிவிட வேண்டும்
** ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி உங்கள் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
டிக்கெட் கிடைக்கும் இடங்கள்
ஆன்லைன் தவிர, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ITDC) பயண கவுண்டர்கள், டெல்லி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (DTDC) கவுண்டர்கள் மற்றும் டெல்லியில் உள்ள துறைசார் விற்பனை கவுண்டர்கள் உட்பட பல்வேறு இடங்களில் குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
மேலும், சேனா பவன், சாஸ்திரி பவன், ஜந்தர் மந்தர், பிரகதி மைதானம், பார்லிமென்ட் ஹவுஸ், பார்லிமென்ட் ஹவுஸ் வரவேற்பு அலுவலகம் மற்றும் ஜன்பத்தில் உள்ள இந்திய அரசின் சுற்றுலா அலுவலகங்களில் குறிப்பிட்ட நேரத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இதுபோன்று நேரடியாக டிக்கெட் வாங்க, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை அல்லது பாஸ்போர்ட், இதில் ஏதாவது ஒன்றின் அசல் அடையாள அட்டையை கொண்டு செல்வது கட்டாயம்.