ராமர் கோயில் குடமுழுக்கு விழா… அத்வானி பங்கேற்காதது ஏன்? காரணம் இதுதான்
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பங்கேற்பது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரத யாத்திரை நடத்திய அத்வானி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த பரப்புரையை பல்வேறு தரப்பினரிடமும் கொண்டு சேர்த்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்ற பட்டியலில் அத்வானிக்கு முக்கிய இடம் உள்ளது. 96 வயதாகும் அத்வானி வயது மூப்பு மற்றும் அயோத்தியில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேபோன்று மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாள் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். டெல்லியில் இருந்து புறப்படும் அவர், காலை 10.25 மணி அளவில் அயோத்தி விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் 10.55 மணிக்கு விழா நடைபெறும் ராமஜென்ம பூமிக்கு செல்கிறார். 11 மணி அளவில் ராமர் கோயிலுக்குள் சென்று, அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்கிறார். நண்பகல் 12 மணி வரை அந்த பூஜைகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான, ராமர் சிலை பிரதிஷ்டை அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடைபெறும். 12.05 மணி முதல் 12.55 மணி வரையிலான நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் கோயிலில் மலர்கள் தூவப்படுகிறது.
பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்றுவர். 2.10 மணி அளவில் ராம ஜென்மபூமி வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் பிரதமர் வழிபடுகிறார்.