ராமர் கோயில் சிறப்பு நேரலை விவகாரம்… அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு மறுப்பு!
தமிழக கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரலை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக நிர்மலா சீதாராமன், அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் அயோத்தி குடமுழுக்கு நேரலை நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது. இதற்கு எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்ட நிர்மலா சீதாராமன், கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நேரலை நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞரணி மாநாட்டை திசைதிருப்பவே இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக கூறினார். இதையடுத்து, சேகர்பாபுவுக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிர்மலா சீதாராமன், இந்துக்களின் வழிபாட்டு முறையில் மாற்றி மாற்றி இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு முழுவதும் வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தங்களது கடமை என்று தெரிவித்தார்.
இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோயிலில், தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, மரக்கன்று நட்டுவைத்த நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவிடாமல் காவல்துறை மூலம் தடுப்பதாக மீண்டும் குற்றஞ்சாட்டினார். எவ்வித அனுமதியும் மறுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியதற்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தடையை மீறி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை நடைபெறும் என்றார். இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பின் போது தமிழ்நாட்டில் சிறப்பு பூஜை, அன்னதானத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
திமுக ஆட்சியில் ஆயிரத்து 270 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளதாகவும், 764 கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதே போன்று, பொது இடங்களில் அயோத்தி குடமுழுக்கு விழாவை நேரலையாக ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள காவல்துறை, முறையாக விண்ணப்பித்தால் பரிசீலனை செய்து அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.