அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினி குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்தக்கோவிலில் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவில் இருந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இதற்காக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு விமானம் மூலம் சென்ற ரஜினிகாந்த், உடன் தன்னுடைய மனைவி லதா மற்றும் அண்ணன் சத்யநாராயணா ஆகியோரையும் அழைத்து சென்றிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு அவரை அழைத்து சென்று விஐபி-களுக்காக ஒதுக்கப்பட்ட ஏரியாவில் முன்வரிசையில் அமர வைத்தனர். அவர் அருகில் சச்சின் டெண்டுல்கர், முகேஷ் அம்பானி ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.
பின்னர் தன்னுடைய குடும்பத்தினருக்கு முன் வரிசையில் அமர அனுமதி மறுக்கப்பட்டதை கவனித்த ரஜினிகாந்த், அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசிய பின்னர் அவர்களுக்கு விஐபி ஏரியாவில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்தே ரஜினியின் குடும்பத்தார் உள்ளே வந்து ரஜினி அருகே அமர்ந்ததாக கூறப்படுகிறது.