ரத்த காயத்துடன் வெளியில் ஓடிவந்த சிறுவர்கள் – வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி – நடந்தது என்ன?

கே ரளா மாநிலத்தில் உள்ள, திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பினு-ஷீஜா தம்பதியினர். இவர்கள் இருவரும் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினையால், தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை இந்த தம்பதிகளின் குழந்தைகள் இருவரும், அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் அழுதபடியே வீட்டிலிருந்து அருகில் உள்ள வீடுகளை நோக்கி ஓடி வந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று வீட்டிற்குள் பார்த்தபோது, அங்கு ஷீஜா, அரிவாளால் வெட்டப்பட்டு ரத்தத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைப்பார்த்து பேரதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின்படி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அருகில் உள்ள கொரட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்தபோது அது பினு என்பது தெரிய வந்தது. அவரது உடலையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.