ஒரே நாளில் 17%, 10 மாதத்தில் 300% லாபம்..முதலீட்டாளர்கள் வாங்கி குவித்த மல்டிபேக்கர் பங்கு Sigachi Industries
1989ல் தொடங்கப்பட்ட நிறுவனம் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ். நிறுவனம் மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ் (எம்சிசி) உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
மருந்து, உணவு, ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் அழகுசாதனத் துறை மருந்துகளில் ஒரு துணைப் பொருளாக எம்சிசி பயன்படுத்தப்படுகிறது.
2021 நவம்பரில் தான் நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் களமிறங்கியது. அப்போது இந்நிறுவனம் ஒரு பங்கின் விலை ரூ.163 என்ற விலையில் 76.95 லட்சம் பங்குகளை வெளியிட்டு ரூ.125.43 கோடி திரட்டியது. அந்த மாதம் 15ஆம் தேதி நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் வலுவான வர்த்தகம் மற்றும் நிதி நிலை முடிவைக் கொண்டுள்ளதால் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில், நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவு கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு வெளியிடப்பட்டது. நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக இருந்தது.
2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஓட்டு மொத்த நிகர லாபமாக ரூ.16.11 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 64.05 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஓட்டு மொத்த அடிப்படையிலான செயல்பாட்டு வாயிலான வருவாய் 61.47 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.110.95 கோடியாக உயர்ந்துள்ளது.இந்நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில், கடந்த சனிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஒரே நாளில் இங்கின் விலை 17.35 சதவீதம் அதிகரித்து 52 வார உச்சமான ரூ.86.69ஐ எட்டியது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.73.87ல் குறைந்துள்ளது.
நிறுவன பங்கின் விலை வர்த்தகத்தின் முடிவில் ரூ.81.55 ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,507.05 கோடியாக உள்ளது.இந்த நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்துள்ளது. 2023 மார்ச் மாதத்தில் இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.22ஐ எட்டியது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு விலை 295 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலை 65 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளையில் கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணம் 175 சதவீதம் அதிகரித்துள்ளது.