குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார் – பிரதமர் மோடி பெருமிதம்!

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அச்சிலைக்கு கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் கீழ் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் மோடி செய்தார்.

இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார். கும்பாபிஷேக விழாவுக்கு பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார்; பெரிய கோவிலில் தங்குவார் என பெருமிதம் தெரிவித்தார்.

சாகர் நதியில் இருந்து சராயு நதி வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாகர் முதல் சராயு வரை ராமரின் பண்டிகை உணர்வு எல்லா இடங்களிலும் தெரிகிறது என அவர் கூறினார். “இன்று ராம பிரானின் பக்தர்கள் இந்த வரலாற்றுத் தருணத்தை முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பதில் எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. நமது நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பிரபு ராமரின் பக்தர்கள் இதை ஆழமாக உணர்கிறார்கள். இந்த தருணம் தெய்வீகமானது, இந்த தருணம் எல்லாவற்றிலும் புனிதமானது.” என்று பிரதமர் மோடி கூறினார்.

அந்த காலக்கட்டத்தில் 14 வருடங்கள்தான் பிரிவினை நீடித்தது. ஆனால், இந்த யுகத்தில் அயோத்தியும் நாட்டு மக்களும் பலநூறு வருடங்களாக பிரிவினையை தாங்கிக் கொண்டிருந்தார்கள் என பிரதமர் குறிப்பிட்டார். “பல பத்தாண்டுகளாக ராமருக்கான சட்டப் போராட்டம் நடைபெற்றது. இந்த பிரிவினையை நம் தலைமுறைகளில் பலர் அனுபவித்திருக்கிறார்கள். நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பல நூற்றாண்டுகளாக நம்மால் இப்பணியை செய்ய முடியாமல் போனதற்கு நமது முயற்சியிலும், தியாகத்திலும், தவத்திலும் ஏதோ குறை இருக்க வேண்டும். இதற்காக நானும் ஸ்ரீராமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இன்று இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்.” என்று உணர்ச்சி பொங்க பிரதமர் மோடி பேசினார்.

இன்றைய சூரிய உதயம் ஒரு அற்புதமான பிரகாசத்தைக் கொண்டுவந்துள்ளது; இன்றைய நாள் வரலாற்றில் எழுதப்படும்; இது ஒரு புதிய காலச் சுழற்சியின் தோற்றம்; குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார்; பெரிய கோவிலில் தங்குவார் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *