“அரசியல் பேசினால் என்ன தவறு?” – கீர்த்தி பாண்டியன் ஆதங்கம்
சென்னை: ‘அரசியல் பேசினால் என்ன தவறு? நாம் உண்ணும் உணவு உடை என ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது.
அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது’ என நடிகை கீர்த்தி பாண்டியன் பேசினார்.
இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் ‘இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்ததால் நான் நடிக்க சம்மதித்தேன்.
பா.ரஞ்சித் படத்தை தயாரிக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா? என்று கேட்கிறார்கள். அரசியல் பேசினால் என்ன தவறு?. நாம் உண்ணும் உணவு உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
எல்லாப் படங்களில் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பா.ரஞ்சித் பேசும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இன்று மிகமிக முக்கியமான நாள். இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, ‘காலு மேல காலு போடு ராவணகுலமே’ என்று பாடத் தோன்றுகிறது’ என்று பேசினார்.