பாஜகவிற்கு இருந்த சிறிய வாய்ப்பும் போகுது! நிர்மலா சீதாராமனே வழிகாட்டியாக உள்ளார்.. கி வீரமணி தாக்கு
பாஜகவுக்கு இருக்கிற சிறிய வாய்ப்பையும் நாசப்படுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிகாட்டியிருக்கிறார் என்று கி. வீரமணி கூறினார். மேலும் வெள்ளத்தை பயன்படுத்தி பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் பேசினார்.
தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் புகைப்படத்துக்கு கி. வீரமணி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்பாது செய்தியாளர்களை சந்தித்த கி. வீரமணி பாஜகவுக்கு இருக்கிற சிறிய வாய்ப்பையும் நாசப்படுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிகாட்டியிருக்கிறார் என்று கூறினார்.
மேலும் வெள்ளத்தை பயன்படுத்தி பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள் என்று பேசினார். இது தொடர்பாக கி.வீரமணி பேசியதாவது:- கொஞ்சம், நஞ்சம் துளிர்க்கலாம் என்றிருந்த அவர்களது நம்பிக்கையை நாசப்படுத்தும் நல்ல பணியை இப்போது அவர்கள் இந்த வெள்ளத்தை பயன்படுத்தி காவிகள் செய்திருக்கிறார்கள். அதற்கு ஒரு நிதி அமைச்சரே வழிகாட்டியிருக்கிறார்.
நிச்சயமாக அது அத்தனையையும் மக்கள் சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். எவைகள் எல்லாம் எங்கள் மீது வீசப்பட்ட அசிங்கங்களோ, குற்றங்களோ அவை எல்லாம் எங்களுடைய திராவிட பயிர் இதுவரையிலே வளரக்கூடிய உரங்களாக மாற்றப்பட்டது தான் வரலாறு. அது இனிமேலும் தொடரும். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
முன்னதாக சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சென்னை உள்பட 4 மாவட்டங்களும், சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் அம்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள நிதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
இதேபோல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு சென்ற மத்திய குழு இன்னும் நிதியை வழங்கவில்லை. இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இந்த பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மழை பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும், அதற்கான வழிமுறைகள் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் முதல்வர் ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட செல்லாமல் இந்தியா கூட்டணி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்திருந்தார் என்றும் விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக மத்திய பாஜகவை விமர்சித்து திமுகவினர் கருத்து தெரிவித்து வந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் தான் திராவிட கழக தலைவர் கி. வீரமணி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.