அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ. 2.51 கோடி வழங்கிய முகேஷ் அம்பானி!
அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.2.51 கோடி அளவுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பலரும் பங்கேற்ற இந்த விழாவில் இந்தியாவின் விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என நூற்றுக்கணக்கான பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அயோத்தியில் ராமர் கோவிலானது முழுவதுமாக பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களும், பிரபலங்களும் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர். அந்த வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 2.51 கோடி அளித்துள்ளார்கள்.
ஒட்டுமொத்தமாக ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் ரூ.2000 கோடிக்கு அதிகமாக நிதி திரட்டப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலின் வடிவமைப்பு குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த பாரம்பரியமிக்க சோம்புரா குடும்பத்தின் கலை முயற்சியில் உருவாகியுள்ளது. உலகளவில் 100க்கும் மேற்பட்ட கோயில்களை சோம்புரா குடும்பம் வடிவமைத்துள்ளது.
இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ள வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில், 235 அடி அகலம், 360 அடி நீளம், 161 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக கோயிலை கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். கம்போடியாவின் அங்கோர் வாட், அமெரிக்காவின் சுவாமிநாராயண் அக்சர்தாம் கோயில்களுக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மிகப்பெரிய கோயிலாக இது மாறும். 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கோயிலில் 366 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
57,400 சதுரஅடியில் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலின் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன. கோயிலுக்காக மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.