மாஸ் காட்டுமா டாடா பஞ்ச் எலெக்ட்ரிக் கார்? – விலை எவ்வளவு தெரியுமா?
இந்திய சந்தையில் டாடா பஞ்ச் பெட்ரோல் வேரியன்ட் கார்கள் நல்ல மதிப்பைக் கொண்டுள்ளன. இந்த நேரத்தில் மின்சார வாகனங்களின் தேவை சந்தையில் அதிகரித்து வருவதையடுத்து, பஞ்ச் மாடலின் எலெக்ட்ரிக் வேரியன்ட்டை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா பஞ்ச் 5 வேரியன்ட்ஸ்களில் சந்தைக்கு வந்துள்ளது. அவை ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ஞர், எம்பவர்டு, எம்பவர்டு+ ஆகியவை ஆகும். இதனை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.21,000 என்ற தொகையை முன்பணமாகச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா பஞ்ச் இவி வடிவமைப்பு:
இதன் பின்பக்கம் பேனட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் நெக்சான் இன்ஸ்பையர்டு நீண்ட எல்இடி விளக்கு டாடா கார்களின் புதுமையான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. இந்த காரில் புதிய மாடல் பம்பர் மற்றும் முன்பக்க கிரில் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் போன்ற இதன் கூடுதல் அம்சங்களாகும். முக்கியமாக, முன்பக்க டாடா லோகோ அருகில் சார்ஜர் கொண்டுள்ள முதல் காராக பஞ்ச் இவி வெளியாகியுள்ளது. மேலும், Y வடிவ பிரேக் லைட்டுகள், ஸ்பாய்லர் போன்றவையும் இந்த காரில் கொடுக்கப்படுகிறது. மேம்பட்ட டாப் மாடல் வகைகளில் 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.
டாடா பஞ்ச் இவி இன்டீரியர்
இரட்டை நிற அமைப்பில் இந்த காரின் இன்டீரியர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சஃபாரி, ஹேரியர் மாடல்களில் உள்ளது போல ஸ்டியரிங்கில் மிளிரும் டாடா லோகோ, 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 10.23 இன்ச் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டம் ஆகியவை இண்டீரியரின் பிரதான அம்சங்கள். விலை உயர்ந்த கார்களில் வழங்கப்படும் வென்டிலேட்டட் சீட் இதில் கொடுக்கப்படுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப் போன்ற அம்சங்களும் டாடா பஞ்ச் இவி காரில் உள்ளன.
டாடா பஞ்ச் இவி பேட்டரி திறன்
பஞ்ச் இவியில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அதில் 25 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 315 கிலோமீட்டரும், 35 கிலோவாட் பேட்டரி கார் 421 கிலோமீட்டர் மைலேஜை கொண்டுள்ளன. மேலும், இரண்டு டிரைவிங் மோடுகளில் இந்த கார் வருகிறது. ஒன்று 120 பிஎச்பி பவரில் 190 என் எம் டார்க்கை வெளிப்படுத்தும் மோடாகவும், மற்றொன்று 80 பிஎச்பி பவரில், 114 என் எம் டார்க்கை வெளிப்படுத்தும் மோடு ஆகவும் உள்ளன.
டாடா பஞ்ச் இவி பாதுகாப்பு வசதிகள் மற்றும் விலை
பஞ்ச் இவி அடிப்படை மாடல் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 லட்சமாகவும், பிரீமியம் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.49 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேகுகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ISOFIX, ரோல்-ஓவர் மிட்டிகேஷன், பிரேக் டிஸ்க் வைப்பிங், ஹைட்ராலிக் ஃபேடிங் காம்பென்சேஷன், 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.