அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிகம் நன்கொடை கொடுத்தவர் யார் தெரியுமா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிகம் நன்கொடை கொடுத்தவர் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு மற்றும் கோயில் திறப்பு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், இந்தியாவின் மிக முக்கியமான நபர்கள் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். ராமர் கோயில் கட்டுவதற்கான செலவு முழுவதும் பக்தர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
அந்த வகையில் தனி நபர்கள், நிறுவனங்கள் என ஏராளமானோர் நன்கொடையை வாரி வழங்கியுள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த திலீப் குமார் லகி என்பவரும் அவரது குடும்பத்தினரும் ராமர் கோயில் கட்டுவதற்காக 101 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு ரூ. 68 கோடி ஆகும்.
தனி நபர் வழங்கிய அதிகபட்ச நன்கொடை தொகையாக இது பார்க்கப்படுகிறது. இந்த 68 கிலோ தங்கமானது கோயிலின் கதவுகள், திரிசூலும், பில்லர்கள், புனித பகுதிகள் உள்ளிட்டவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆன்மிக தலைவர் மொராரி பாபு ரூ. 11.30 கோடி பணத்தை அளித்துள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பக்தர்கள் ரூ. 8 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி கேவிந்த் பாய் தொலாகியா ரூ. 11 கோடி அளவுக்கும், பாட்னாவை சேர்ந்த மகாவீர் கோயில் நிர்வாகி ரூ. 10 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு கிராமத்திலும் இன்று ராம கீதம் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், நாடே இன்று தீபாவளி கொண்டாடுவதாக பேசினார். மிகப்பெரிய சட்டப் போராட்டத்தால் கோயில் சாத்தியமானது என்றும், நியாயம் வென்றதாக பிரதமர் மோடி பேசினார். தமிழ்நாடு கோயில்களுக்கு சென்றது பாக்கியமாக கருதுவதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ராமநாதர் சாமி கோயில் மற்றும் தனுஷ்கோடிக்கு சென்றது தனது பாக்கியம் என்றார். சட்டங்களுக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதாக பேசிய மோடி, நாட்டு மக்களின் மனதில் ராமர் குடியேறியுள்ளதாக தெரிவித்தார்.