Ex காதலன் மீது கடுப்பா.? கரப்பான்பூச்சி மூலம் பழிவாங்கலாம்.. இப்படியும் இரு காதலர் தின ஆஃபர்!
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் காதலர்கள், காதலை வெளிப்படுத்த பரிசு கொடுப்பது, சுற்றுலா செல்வது அல்லது இருவருக்கும் பிடித்ததை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவர். இது வழக்கமாக இருக்கும் நிலையில், ஒரு புதுவிதமான அறிவிப்பை அமெரிக்காவில் இருக்கும் ஒரு பூங்கா வெளியிட்டுள்ளது.
அப்படி என்னங்க புதுசா சொல்லிடப்போறாங்க என்று நீங்கள் கேட்கலாம், எல்லாரும் காதலருடன் கொண்டாடும்போது, முன்னாள் காதலர் மீது இருக்கும் வன்மத்தை தீர்க்கும் வகையில் இந்த பூங்கா ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.
அது அந்த பூங்காவில் இருக்கும் மடகாஸ்கர் கரப்பான்பூச்சிக்கு உங்கள் முன்னாள் காதலரின் பெயரை வைப்பதுதான். முன்னாள் காதலரின் பெயரை கரப்பான்பூச்சிக்கு வைப்பதன் மூலம் ஒருவர் அவர் மீது இருக்கும் வன்மத்தையும், உணர்ச்சிகளையும் வெளியேற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில்தான் இந்த புதுவிதமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக $15 அதாவது இந்திய மதிப்பு படி ரூ.1246 வசூலிக்கப்படுகிறது. இப்படி ஒரு கரப்பான்பூச்சிக்கு உங்கள் முன்னாள் காதலரின் பெயரை கட்டணம் செலுத்தி வைத்தீர்கள் என்றால், உங்கள் முன்னாள் காதலருக்கு இமெயில் மூலமாக கரப்பான்பூச்சி புகைப்படத்துடன் இந்த தகவல் அனுப்பப்படும். மேலும், கூடுதலாக $20 செலுத்தினால், கரப்பான்பூச்சி பொம்மை, மற்றும் கரப்பான்பூச்சியின் வடிவத்தில் பல பரிசுகளை முன்னாள் காதலர் வீட்டிற்கு அனுப்பி வைப்பர். அந்த உயிரியல் பூங்கா இதனை மிக தீவிரமாக செய்து வருகிறது.
பிரேக்கப் செய்ய முடியாமல் தவிப்பவர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி ஒரே அடியாக அவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி இந்த பூங்கா அறிவிப்பை வெளியிட, இதற்கு போட்டியாக, சான் அன்டோனியோ உயிரியல் பூங்கா, இன்னும் ஆச்சரியப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், கரப்பான்பூச்சி, எலி அல்லது காய்கறிக்களுக்கு உங்களது முன்னாள் காதலரின் பெயரை வைத்தால், அதனை பூங்காவில் உள்ள மிருங்களுக்கு சாப்பிட உணவாக கொடுத்து விடுவோம் என தெரிவித்துள்ளது.
இதன் மூலம், மக்கள் அவர்களது முன்னாள் காதலால் ஏற்பட்ட மன உளைச்சலை தீர்த்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. “இதெல்லாம் ஒரு திட்டமா?” இன்று வியப்பூட்டும் இந்நிகழ்வு, 30 நாடுகளின் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பது தான் ஆச்சர்யம்.