புத்தாண்டின் தொடக்கமே இப்படியா? – ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல ஐடி நிறுவனங்கள்!
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், நம் வாழ்வில் ஒரு படி மேலே வளர்ச்சி அடைய வேண்டும் என்ற கனவுகள் நம் மனதில் நிரம்பி இருக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ தொழில்நுட்ப வில்லன் களமிறங்கிய நாள் முதலே தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இறங்கு முகமாக அமைந்துவிட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது 2023 ஆம் ஆண்டில் சற்று அதிகமாக இருந்தது. அதன் தாக்கம் இந்த புத்தாண்டிலும் இருக்க கூடும் என்று ஏற்கனவே கணித்தபடி நடக்கத் தொடங்கி இருக்கிறது. புதிய ஆண்டு தொடங்கிய இரண்டு வாரத்திற்குள்ளாக 7000க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இனி வரக்கூடிய நாட்களும் மிக மோசமானதாக இருக்க கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து Layoff.fyi என்ற ஆன்லைன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், “மொத்தம் 48 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 7,528 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் கடந்த சில ஆண்டுகளில் திடீரென்று முளைத்த பல சிறிய நிறுவனங்களிலும் கூட இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Zest Money, பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்திய கிளை உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூகுள், நெட்ஃபிளிக்ஸ், Spotify போன்ற நிறுவனங்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான பிங் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்கள் உட்பட பல இடங்களிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். முன்னதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த வாரம் வீடியோ ஒன்றில் பேசும்போது, ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருவதன் காரணமாக இனிவரும் காலங்களில் கடினமான முடிவுகள் சிலவற்றை எடுக்க வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மேம்பட்ட பொருளாதார தளங்களில் 60 சதவீதமும், வளர்ந்து வரும் நாடுகளின் வேலைவாய்ப்பில் 40 சதவீதமும் பாதிக்கப்படும் என்று IMF நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டாலியோனா ஜார்ஜியா தெரிவித்தார். முன்னதாக அமேசான் நிறுவனத்தில் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஒவ்வொரு ஆண்டும் மேலாளர்கள் சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களை குறைத்து வழங்க அமேசான் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது என்றும், இதனால் ஊழியர்களுக்கான பலன்கள் குறையும் என்றும் தகவல்கள் வெளியாகின. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.