மக்களவை தேர்தலுக்கு தயாராகும் பாமக… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அன்புமணி
சென்னையில் எதிர்வரும் பிப்ரவரி 1-ம் தேதியன்று பாட்டாளி மக்கள் கட்சி சிறப்புப் பொதுக்குழு கூட்டம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் -2024 வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையேற்பார். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.