தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை இருக்காது – அண்ணாமலை
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நேரடி ஒளிபரப்பை சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சாமி கோயிலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பார்த்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி நடப்பதை, இந்து மக்கள் உணர்ந்திருப்பதாக தெரிவித்தார்.
இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய், ஒரே பிள்ளை, ஒரே ரத்தம் என்பதை அயோத்தியில் குழந்தை ராமரின் பிராண பிரிதிஷ்டை நிகழ்வு எடுத்துரைத்திருக்கிறது. மக்களின் நம்பிக்கைக்கு எதிராக அடக்குமுறையை கையாளுகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள், திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்ற
நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அறநிலையத்துறை கட்டாயம் இருக்காது என்றார்.
இதனிடையே கோவை ஆர்.எஸ்.புரம் அருகேயுள்ள ஸ்ரீராமர் பஜனை திருக்கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில் முன்பு சாலையோரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
அப்போது அனுமதியின்றி சாலையோரத்தில் வாகனத்தில் இருந்து நேரலை காட்சிகளை ஒளிபரப்ப காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.