தமிழக கோவில்களில் பூஜைக்கு தடை விதிப்பதாக மத்திய அமைச்சர் பொய் கூறுகிறார்; அது அவருக்கு அழகல்ல – துரைமுருகன்
வேலூர்மாவட்டம், பொன்னையில் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சென்னைக்கு புதிய அரசு பேருந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த இந்த விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு புதிய பேருந்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பொன்னை ஆற்றில் கிராமத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படுவது சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குப்பையை கொட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும். பொன்னை பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தடுப்பணை கட்டும் பணியும் நடந்து வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், காலாவதியான கல்குவாரியை எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். காலாவதியான கல்குவாரியை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ராமர் ஆலயம் கும்பாபிஷேகத்தில் தமிழகத்தில் ஆலயங்களில் பூஜை நடத்த தடைவிதிப்பதாக கூறுவதாக மத்திய அமைச்சர் கூறுவது உண்மை இல்லை.
அமைச்சர் பொய் கூறுகிறார். அது அவருக்கு அழகல்ல. பொன்னை தடுப்பணை டெண்டர் முடிந்து பணிகள் துவங்கபடவுள்ளது. மேல் அரசம்பட்டு அணைக்காக ஆய்வு செய்ய ரூ.44 லட்சம் அளித்துள்ளோம். பணிகளை துவங்க ஆய்வு செய்து வருகின்றனர். பொன்னையை பேரூராட்சியாக மாற்றுவதை இப்போது தான் என் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.