குட் நியூஸ்..! ஆகஸ்ட் மாதத்துக்குள் கிளாம்பாக்க புதிய ரயில் நிலையம்..!
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில், வண்டலூர் – ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில் நிலையப் பணிகள் அண்மையில் தொடங்கின.
ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த நிலையம், மூன்று நடைமேடைகளுடன் அமைய உள்ளது. மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலையக் கட்டடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம். ரயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.