ராமர் கோவில் செல்ல பக்தர்கள் முன்பதிவு செய்வது எப்படி?
அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிறைவடைந்தது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்துள்ளனர். ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நேற்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அயோத்தி பால ராமரை பக்தர்கள் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) தரிசிக்கலாம். காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மக்கள் https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
ஆனால் இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. இதே இணையதளத்தில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம். கோவில் திறக்கப்பட்டவுடன் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.