100 நாள் மனைவியை காப்பாத்த போராடினேன்.. முடியல போயிட்டா.. காமெடி நடிகர் வாழ்க்கையில இவ்ளோ சோகமா?
சென்னை: காமெடி நடிகராகவும் கிரிக்கெட் விமர்சகராகவும் பல ஆண்டுகள் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வரும் 61 வயதான பாஸ்கியின் வாழ்க்கையில் உள்ள ஏகப்பட்ட சோகங்களை சமீபத்திய பேட்டியில் அவர் மனமுடைந்து பேசியுள்ளார்.
உனக்காக மட்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்த பாஸ்கி விஜய்யின் யூத் படத்தில் கிரி எனும் காமெடி ரோலில் நடித்திருப்பார். அதன் பின்னர், தூள், எதிரி, சிவகாசி படத்தில் லியோ எனும் ரோல் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ஜீவி, பேய் மாமா படங்கள் வரை நடித்துள்ள இவர் கிரிக்கெட் விமர்சகராகாவும் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மட்டுமே தெரிந்த பலருக்கும் அவரது வாழ்க்கையில் 2 வயதில் இருந்தே குடும்பத்தில் மரணங்களை சந்தித்து வந்தது குறித்து தெரியாது.
கஷாயம் வித் பாஸ்கி: காப் வித் டிடிக்கு முன்னாடி எல்லாம் கஷாயம் வித் பாஸ்கி தான் சன் டிவியில் பிரபலமான ஷோவாக இருந்தது. சொல்லுங்க பாஸ் நிகழ்ச்சி எல்லாம் வேறலெவலில் அப்போது டிரெண்டானது. ரேடியோ மிர்ச்சி, பிக் எஃப் எம் என ரேடியோ சேனல்களிலும் வேலை பார்த்த பாஸ்கி கிரிக்கெட் விமர்சகராகவும் மாறி கலக்கி வருகிறார். 60 வயதான நபர் மாதிரியே பார்த்தால் தெரியாது. இன்னமும் அவரது பேச்சிலும் உடல் அசைவுகளிலும் 40 வயது நபர் போலவே செயல்பட்டு வருகிறார்.
2 வயதிலேயே மரணத்தை பார்த்துட்டேன்: கூட்டுக் குடும்பமாக மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தோம். எனக்கு 2 வயசா இருக்கும் போதே மாடியில் இருந்து விழுந்து என் தாத்தா செத்துடாரு, அப்போவே சாவுன்னா என்னன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு, ஒரு பக்கம் கல்யாண ஊர்வலம் போகும் இன்னொரு பக்கம் ஒரு நாளைக்கு 5 சாவு போகும் இதெல்லாம் பார்த்து பார்த்து பழகிட்டேன்.
18 பேர் செத்துட்டாங்க: எஸ்.பி. பாலசுப்ரமணியம், விசு உள்ளிட்ட பிரபலங்களுடன் எனக்கு ரொம்ப நெருக்கம். தினமும் அவர்களுடன் பேசுவேன் அவர்களுடன் சேர்த்து எனக்கு நெருக்கமான 18 பேரை கடந்த 30 மாதத்தில் பறிகொடுத்து விட்டேன் அதில் என் மனைவியும் ஒருத்தவங்க என கண் கலங்கினார்.
100 நாள் போராடியும் போயிட்டா: குடும்பத்தில் பலரது மரணங்களை அடிக்கடி பார்த்து மனசு கஷ்டமாக இருந்த நேரத்தில் என் மனைவிக்கு திடீரென கேன்சர் நோய் என தெரிந்து உடைந்தே போய் விட்டேன். சுமார் 100 நாட்கள் அவளை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என மருத்துவமனைக்கும், ஹீலிங் சென்டர்களுக்கும், மருந்துக் கடைக்கும் அலைந்து திரிந்தேன். தினமும் அவளுக்கு ஒண்ணுமே ஆகாதும்மா எல்லாமே சரியாகிடும் என மோட்டிவேஷ்னல் ஸ்பீச் எல்லாம் கொடுத்தேன். ஆனால், எதுவுமே பலனளிக்காமல் அவ போயிட்டா, வாழ்க்கைனா இதுதான் என சிறு வயதில் இருந்தே தெரிந்ததால் மனைவியின் இழப்பையும் மறந்து விட்டு மற்றவர்களை சிரிக்க வைக்க போராடி வருகிறேன் என்றார்.
செல்ஃபி கேட்ட குடும்பம்: மனைவியின் இறுதிச்சடங்கை முடித்து விட்டு வெளியே வந்தேன். ஒரு குடும்பம் என்னை பார்த்து செல்ஃபி கேட்டாங்க, அவங்களோட நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டேன். அவங்களுக்கு என் வலியையும் வேதனையையும் ஏன் கடத்தணும். அவங்க இதுக்கு மேல என்னை பார்க்கக் கூட மாட்டாங்க என செம மெச்சூரிட்டியாகவும் வலிகளை உள்ளே புதைத்துக் கொண்டும் பாஸ்கி பேசியுள்ள பேட்டி உருக வைக்கிறது.