நல்லா ஓட்டி பார்த்து வாங்குங்க… ஷோரூம்களில் டெஸ்ட் டிரைவ்க்கு கிடைக்கும்! சிட்ரோனின் புது ஆட்டோமேட்டிக் கார்
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் (Citroen C3 Aircross Automatic) கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் கார் ஒன்றின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றின் மூலம் இந்த காரை பற்றி நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.
பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோனின் ஏர்கிராஸ் ரக கார்கள் உலகளவில் பிரபலமானவை. இதனாலேயே இந்தியாவில் தனது முதல் காராக சி5 ஏர்கிராஸை சிட்ரோன் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அதிகப்படியான விலையினால் சி5 ஏர்கிராஸின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை. இதனை அடுத்து, சிறிய அளவிலான சி3 ஏர்கிராஸ் சிட்ரோன் நிறுவனத்தில் இருந்து வெளிவந்தது.
குறைந்த விலை மற்றும் ஸ்டைலான தோற்றத்தினால் சி3 ஏர்கிராஸை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், சி3 ஏர்கிராஸில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுவர சிட்ரோன் தயாராகி வருகிறது. இதன்படி, சி3 ஏர்கிராஸ் காரில் புதியதாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது.
வருகிற ஜனவரி 29ஆம் தேதி சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு இன்னும் 1 வாரம் இருக்கும் நிலையில், சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் கார்கள் ஏற்கனவே டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பான படங்கள் கார் தேக்கோ செய்தித்தளம் மூலமாக இணையத்தில் வெளியாகி உள்ளன.
ஓட்டிப் பார்க்க விரும்பப்படும் கஸ்டமர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கொடுப்பதற்காக இப்போதே ஷோரூம்களுக்கு சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் கார்கள் வருகை தர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சி3 ஏர்கிராஸ் ஆனது 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்ட சிட்ரோனின் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும். தற்போதைக்கு இந்த எஸ்யூவி கார் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த என்ஜின் உடன் சி3 ஏர்கிராஸில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைத்து வந்தது. இனி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் உடன் எந்த அளவிற்கு இயக்க ஆற்றலை வெளிப்படுத்துமோ அதே அளவிலான பவர் அவுட்-புட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சி3 ஏர்கிராஸ் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே சில டீலர்ஷிப் ஷோரூம்களில் துவங்கப்பட்டுவிட்டன. தோற்றத்தை பொறுத்தவரையில், மேனுவல் சி3 ஏர்கிராஸுக்கும், புதிய ஆட்டோமேட்டிக் சி3 ஏர்கிராஸுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.12.74 லட்சம் வரையில் உள்ளன.
புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை இதனை காட்டிலும் ரூ.1 லட்சம் அளவிற்கு அதிகமாக எதிர்பார்க்கிறோம். சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காருக்கு விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலெவேட், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், எம்ஜி அஸ்டர் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.