அசைவ உணவுகளை ஜொமட்டோவில் விநியோகம் செய்ய தடை.! பாஜக ஆளும் மாநிலங்களில் வெளியான உத்தரவால் அதிர்ச்சி
அயோத்தியில் மிக பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல மாநிலங்களில் இருந்து 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது விடுமுறையும் அளிக்கப்பட்டது. பல இடங்களில் ராமர் ஊர்வலமும் நடைபெற்றது. கோயில்களில் சிறப்பு வழிபாடு, பஜனை போன்ற நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.முன்னதாக அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
அசைவ உணவுகளுக்கு தடை
ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, குழந்தை ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். இதனிடையே ராமர் கோயில் திறப்பு விழாவின் போது பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது குறிப்பாக மருத்துவனை அரை நாள் செயல்படாது என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஸ்விக்கி நிறுவனம் இறைச்சியை டெலிவரி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஜோமட்டோ நிறுவனத்திற்கு நேற்று தடை விதித்தது தெரியவந்துள்ளது.
ஜோமட்டோ நிறுவனம் விளக்கம்
ஜோமட்டோ நிறுவனத்தில் நேற்று ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அசைவ உணவு இன்று டெலிவரி இல்லையென ஜோமட்டோ நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஜோமட்டோ நிறுவனத்திடம் அந்த நபர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ஜோமட்டோ நிறுவனமும் அசைவ உணவு விநியோகம் செய்யப்படாது என கூறியுள்ளது. மேலும் அரசு வழங்கிய நோட்டீஸ் அடிப்படையில் உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம் என கூறியுள்ளது.
எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள்
இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு என்பது தனிமனித உரிமை அதனை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், கோயில் கும்பாபிஷேக தினத்தில் இது போன்ற முடிவு வரவேற்க தக்கது என மற்றொரு தரப்பினரும் தெரிவித்துள்ளர்.