சென்னையில் இராவணனுக்காக நடத்தப்பட்ட விழாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு
நேற்றைய தினம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இராவணன் திருவிழா சென்னை கே. கே. நகர் பகுதியில் நடைபெற்றது. மே 17 இயக்கம் மற்றும் விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இந்த விழாவில் பங்கேற்றன.
இது தொடர்பாக தகவல் அறிந்த பாஜாவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர், சம்பவ இடத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஜகவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினரை அழைத்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், எம்ஜிஆர் நகரில் இராவணன் திருவிழா கொண்டாடியுள்ளனர். ராமர் கோவில் கும்பாபஷேகம் நிகழ்ச்சிகளை எல்.இ.டி.யில் திரையிட கூடாது என்று சொன்ன திமுக அரசு இராவணன் திருவிழா இன்று நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு அனுமதி அளித்தது முதலமைச்சரா அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினா?
இந்த விழாவிற்கு அனுமதி வழங்கியவர்கள் மீது தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பாஜக போராட்டத்தில் ஈடுபடும். மேடையில் தவறாக பேசியவர்களை அழைத்து வராமல் எங்கள் கட்சிக்காரர்களை போலீசார் அழைத்து வந்தது கண்டனத்திற்குரியது என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் செந்தில் கூறுகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகின்ற இந்நாளில், வேண்டுமென்றே ஆளுகின்ற திமுக அரசு பிரச்சனை ஏற்படுத்துகின்ற நோக்கத்தோடு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம் அதன் விளைவாக காவல்துறையினர் எங்களை கைது செய்தனர் என்றார்.