ஹனுமனாக நடித்த ஹரிஷ் மேத்தா மேடையிலேயே மயங்கி சரிந்து உயிரிழப்பு… அதிர்ச்சி வீடியோ… !
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் இருந்து ஆன்மிகவாதிகள், பிரபலங்கள், அரசியல்தலைவர்கள் என 7000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நடனங்கள், கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்தியா முழுவதும் பொதுமக்கள் தேசிய விழாவாக மிக உற்சாகமாக கொண்டாடினர். வீடுகளில் விளக்கேற்றி வர்ணஜாலம் காட்டினர். அதன் ஒரு பகுதியாக ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஹனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழந்தார். இது நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. மேடையில் இருந்தவர்களும் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே இருந்த நிலையில் அவர் நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காமல் இருப்பதை உணர்ந்தனர். இதன்பிறகு பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ராமாயணத்தை கேட்டுக்கொண்டே, அதில் நடித்துக்கொண்டே உயிரிழந்தது பெரும் நெகிழ்வையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சியின் போது மரணம், நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம் என திடீர் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இளைஞர்களின் திடீர் மரணங்கள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.