தைப்பூசம் 2024: முருகனை வேண்டி விரதம் மேற்கொள்ளும் முறைகள், பயன்கள்!
தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த நாளான தைப்பூசத்தில் விரதம் இருந்து முருகனை வேண்டி வணங்கினால் கிடைக்கதற்கரிய நற்பயன்கள் கிட்டும்.
தை மாதம் தமிழ் மக்கள் பண்பாட்டில் முக்கியமான தமிழ் மாதமாகும். பயிர் அறுவடையை கொண்டாடும் இதே மாதத்தில் தமிழ் கடவுளான முருகபெருமானுக்கு விழா கொண்டாடப்படுகிறது. முல்லை, மருதம், குறிஞ்சி என மூன்று நிலங்களுக்கும் கடவுளாக விளங்கியவர் முருக பெருமான்.
தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திர திதியில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச நன்னாளில்தான் பார்வதி தேவியார் முருக பெருமானுக்கு வேல் அளித்தார். அந்த வேலை கொண்டு முருக பெருமான் அசுரர்களை வதம் செய்தார். இந்நாளிலே முருக பெருமானோடு அவரது வேலையும் வணங்குவது சிறப்பு தரும்.
பலர் தைப்பூச விரதத்தை மார்கழி மாத தொடக்கத்திலேயே தொடங்கிடுவது உண்டு. 48 நாட்கள் உபவாச விரதமிருந்து தைப்பூசத்தில் முருக பெருமானை தரிசனம் செய்கின்றனர். இந்த 2024ம் ஆண்டில் தைப்பூச திதி ஜனவரி 25ம் தேதி காலை 9.14 மணிக்கு தொடங்கி 26ம் தேதி காலை 11.07 வரை நீடிக்கிறது. பூச நட்சத்திரம் முழுமையாக விளங்கும் ஜனவரி 25ம் தேதியில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
முழு பௌர்ணமி நிறைந்த நாளில் வியாழக்கிழமையில் வரும் இந்த தைப்பூசம் பல சிறப்புகளை வாய்ந்தது. சந்திரன் மற்றும் சுக்கிரனின் பூரண பலன்களை வழங்க கூடிய இந்நாளிலே முருக பெருமானை மனது உருக வேண்டி காலை நீராடி விரதமிருந்து கோவிலுக்கு சென்று முருகனை வேண்டி வருவது வாழ்வில் பல சௌகர்ய சௌபாக்கியங்களை அருள்கிறது.