ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு: அண்ணா பல்கலை., சுற்றறிக்கையால் சர்ச்சை!
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ அதாவது தேசிய வல்லமை தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழாவில் தலைமை விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்க 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நிகழ்ச்சியின் போது வருகைப்பதிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் இன்று பங்கேற்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநர், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் இருந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், ‘கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை எதுவுமில்லை’ என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு கோயிலின் பட்டாச்சாரியார் மோகன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.